மாணவர்களிடம் தலைமை பண்பை வளர்க்க 1,013 பள்ளிகளில் மகிழ் முற்றம் துவக்கம்
நாமக்கல் :தமிழகத்தில், அனைத்து விதமான பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களிடம், தலைமை பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில், மாணவர் குழுக்கள் அமைத்து, மாணவர் தலைவர் மற்றும் மாணவ அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவர். இதன் மூலம், மாணவர்களிடம் அரசியல் அறிவு சார்ந்த அனுபவங்கள் மற்றும் ஆளுமை திறன் மேம்பட மாதிரி சட்டசபை, லோக்சபா நடத்தப்படும். இதற்காக, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும்.அதை செயல்படுத்தும் விதமாக, அரசு பள்ளிகளில் மாணவர் குழு அமைப்பை, 'மகிழ் முற்றம்' என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குழுவாக இணைந்து செயல்படுதல், சமூக மனப்பான்மை, வேற்றுமைகள் இல்லாத பரஸ்பர ஆதரவு ஆகியவை இந்த அமைப்பின் நோக்கம்.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 695 தொடக்கப்பள்ளிகள், 156 நடுநிலைப்பள்ளிகள், 67 உயர்நிலைப்பள்ளிகள், 95 மேல்நிலைப்பள்ளிகள் என, மொத்தம், 1,013 பள்ளிகளில், 'மகிழ் முற்றம்' துவங்கப்பட்டுள்ளது. அதன் நிர்வாகிகள் பதவியேற்பு விழா, அந்தந்த பள்ளிகளில் நேற்று நடந்தது. இக்குழுவின் செயல்பாடுகள் மாதம் தோறும் நடக்கும். ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்தில், வெற்றிக்குழுவை அறிவிப்பு செய்யப்படும். ஆண்டு இறுதியில், அந்த பள்ளியில் வெற்றிக்குழு அறிவிக்கப்படும். அதேபோல், மாநில அளவிலும், வெற்றிக்குழு அறிவிப்பு செய்யப்படும்.நாமக்கல் மாநகராட்சிக்குட்பட்ட கொண்டிசெட்டிப்பட்டி பஞ்., நடுநிலைப்பள்ளியில் நடந்த பதவியேற்பு விழாவில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை குழு தலைவர்களாக ஆசிரியர்கள் மாதேஸ்வரன், செல்வமெர்ஸி, சரோஜா, சுதமதி, சுகந்தல்லா ஆகியோர் பொறுப்பேற்று உறுதிமொழி ஏற்றனர்.