ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் என்ற நிலையை உருவாக்கணும்: கலெக்டர் பேச்சு
ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள்என்ற நிலையை உருவாக்கணும்: கலெக்டர் பேச்சுநாமக்கல், செப். 25-''மாவட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் என்ற நிலையை உருவாக்க வேண்டும்,'' என, கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், 'போஷன் அபியான்-' தேசிய ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. எம்.பி., மாதேஸ்வரன், நாமக்கல் மாநகராட்சி துணை மேயர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கலெக்டர் உமா தலைமை வகித்தார்.தொடர்ந்து அவர் பேசியதாவது: நாமக்கல் மாவட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் மூலம் ஆண்டு தோறும் செப்., 1 முதல், 30 வரை, அனைத்து வட்டாரங்களிலும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு கிராமத்தின் ஆரோக்கியத்தில் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார பணியாளர்களின் பங்கு மிக முக்கியமானது. நம் மாவட்டத்தில், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையை அடைய நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, 'ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம், 'போஷன் அபியான்' -தேசிய ஊட்டச்சத்து மாத விழா-2024' உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு, அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார பணியாளர்கள், துணைத்தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லுாரி மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.