வாரச்சந்தை சுங்கவரி நிர்ணய கட்டணத்தை குறைக்க நடக்க இருந்த கூட்டம் ரத்து
ப.வேலுார், ப.வேலுார் வாரச்சந்தையில் சுங்கவரி வசூலிக்க நிர்ணயித்த கட்டணம் அதிகமாக இருப்பதால், அவற்றை குறைப்பதற்காக வருவாய்த்துறை சார்பில், நேற்று நடக்க இருந்த ஆய்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்., சுல்தான்பேட்டையில், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடக்கிறது. இங்கு, ப.வேலுார், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனுார், பரமத்தி, ஜேடர்பாளையம், கபிலர்மலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக, விவசாயிகளிடமிருந்து சுங்கவரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கவரி கட்டணம், கடந்தாண்டைவிட அதிகமாக இருப்பதாக விவசாயிகள் புகாரளித்தனர். இதை குறைக்கக்கோரி, இளம் விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது. இதையடுத்து, சுங்கவரி கட்டணத்தை ஆய்வு செய்து குறைப்பதற்காக, ப.வேலுார் தாசில்தார் அலுவலகத்தில், நேற்று ஆய்வு கூட்டம் நடக்க இருந்தது. ஆனால், திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து, தமிழக இளம் விவசாயிகள் சங்க தலைவர் சவுந்தர்ராஜன் கூறியதாவது: ப.வேலுார் வாரச்சந்தையில் சுங்கவரி கட்டணத்தை குறைக்க வேண்டும் என, விவசாயிகள் சங்கம் சார்பில், நாமக்கல் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்திருந்தோம். இதற்காக இன்று(நேற்று) நடக்க இருந்த கூட்டத்தை, வருவாய்த்துறை அதிகாரிகள் திடீரென ரத்து செய்துள்ளனர். இது விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.