புதிய விரிவான மினி பஸ் திட்டத்தில் 15 பஸ்களை அமைச்சர் துவக்கி வைப்பு
நாமக்கல், ''நாமக்கல் மாவட்டத்தில், புதிய விரிவான மினி பஸ் திட்டத்தின் கீழ், 25 கி.மீ., துாரத்துக்கு, 65 சதவீதம் குறைவில்லாமல் பஸ்கள் செல்லாத இடங்களுக்கு செல்லும் வகையில், மின பஸ் இயக்கப்படும்,'' என, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசினார். தமிழக முதல்வர் ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் போக்குவரத்துத்துறை சார்பில், புதிய விரிவான மினி பஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், புதிய மினி பஸ்கள் இயக்கம் துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி.,க்கள் ராஜேஸ்குமார், மாதேஸ்வரன், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், புதிய மினி பஸ்களின் இயக்கத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், 'புதிய விரிவான மினி பஸ் திட்டம்-2024-ன்' படி, முதற்கட்டமாக புதிய வழித்தடங்களில், ஆறு-, இடப்பெயர்வு வழித்தடங்களில், ஒன்பது என, மொத்தம், 15 வாகனங்கள் இன்று(நேற்று) முதல் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடம், 25 கி.மீ., வரை, 65 சதவீதம் குறைவில்லாமல் பஸ்கள் செல்லாத இடங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்படும். அனைத்து மினி பஸ்களும், புதிய கட்டண அரசாணைப்படி வசூலிக்க வேண்டும். குறைந்தபட்சம், 2 கி.மீ., வரை, நான்கு ரூபாய், அதிகபட்சம், 24 முதல், 26 கி.மீ., வரை, 11 ரூபாய் வசூலிக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.