மோகனுார் சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு
மோகனுார் சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு1 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய இலக்குமோகனுார், நவ. 22-மோகனுாரில் உள்ள, சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின், 2024-25-ம் ஆண்டுக்கான கரும்பு அரவை துவக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஷ்குமார் எம்.பி., கரும்பு அரவையை துவக்கி வைத்து கூறியதாவது:நடப்பு அரவை பருவத்திற்கு, 396 ஏக்கர் நடவு கரும்பும், 2053 ஏக்கர் மறுதாம்பு கரும்பும் என மொத்தம், 2,449 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு, 36.75 டன் சராசரி விளைச்சல் மதிப்பீடாக கணக்கீடு செய்யப்பட்டு மொத்தம், 90,000 டன்கள் பதிவு கரும்பும், பதிவில்லா கரும்புகளை நேரடி பதிவு மூலம், 10,000 டன் என மொத்தம், 2024--25ல், அரவை பருவத்தில், 1 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.இந்த ஆலை 2023--24 கரும்பு அரவைப் பருவத்தில் 1.65 லட்சம் டன்கள் 7.77 சதவிகித சர்க்கரை கட்டு மானத்தில் அரவை செய்துள்ளது. அரவை செய்த கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த கரும்பு கிரயத் தொகை டன் ஒன்றுக்கு ரூ.2919.75 வீதம் மொத்தம் ரூ.48.18 கோடி உறுப்பினர்களுக்கு நிலுவையின்றி ஒரே தவணையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆலைக்கு கரும்பு அனுப்பிய விவசாயிகளுக்கு மாநில அரசு அறிவித்த கரும்பு உற்பத்திக்கான ஊக்கத்தொகை டன் ஒன்றுக்கு ரூ.215- வீதம் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு கரும்பு அரவைப் பருவத்திற்கு ஆலைக்கு கரும்பு வெட்டி அனுப்பும் விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள கரும்பு கிரயத் தொகையான டன் ஒன்றுக்கு ரூ.3,151ஐ ஆலையின் நிதிநிலையின் அடிப்படையில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வழங்கப்படும்.இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி பதிவில்லாக் கரும்பு வைத்துள்ள விவசாயிகள் தங்களது கரும்புகளை நேரடிப் பதிவு மூலம் ஆலைக்கு பதிவு செய்து பயன்பெறலாம். மேலும் தமிழக அரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க சர்க்கரை ஆலை மூலம் புதிய ரக கரும்பு நடவு செய்யும் உறுப்பினர்களுக்குதேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சதவிகித மானியத்தில் (ஏக்கருக்கு ரூ.5,000- மானியம்) புதிய ரக விதைக் கரும்புகள் மற்றும் நாற்றுக்கள் கொள்முதல் செய்து வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார். சர்க்கரை ஆலை மேலாண் இயக்குனர் மல்லிகா, அட்மா தலைவர் நவலடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.