டவுன் பஞ்.,ல் கொசு மருந்துஅடிக்கும் பணி தீவிரம்
- நாமகிரிப்பேட்டை, டிச. 18-நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகளில், 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். முக்கியமாக, நாமகிரிப்பேட்டை டவுன் பகுதியில் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழை மற்றும் குளிர்காலம் என்பதால் கொசு உற்பத்தி அதிகமாகியுள்ளது. பெரிய சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ள ஆத்துார் பிரதான சாலை, புதுப்பட்டி சாலை, வேலவன் நகர், அரியாகவுண்டம்பட்டிரோடு, கடைவீதி, நடுவீதி, சேனியர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கொசு பாதிப்பு அதிகம் உள்ளது. மாலை நேரங்களில் கொசு அதிகளவு வந்து விடுகின்றன. மேலும் பல இடங்களில் காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதனால், டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் மாலை நேரங்களில் கொசு மருந்து அடிக்கும் பணி தொடங்கியுள்ளது.சுகாதார ஊழியர்கள் ஒவ்வொரு வீதியாக சென்று கொசு மருந்து அடித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி மழைநீர் தேங்கியுள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். மழைநீர் தேங்கி நிற்கும் டயர், தொட்டாங்குச்சி, உரல் ஆகியவற்றில் உள்ள மழைநீரை கீழே கொட்டி வருகின்றனர்.