ரூ.2.20 கோடியில் பட்டுக்கூடு அங்காடி எம்.பி., ராஜேஸ்குமார் தகவல்
ராசிபுரம், ராசிபுரம், ஆணைக்கட்டிபாளையம், கூனவேலம்பட்டியில், அரசு பட்டுக்கூடு அங்காடி வளாக கட்டுமான பணிக்கு, இன்று அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. முன்னதாக, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது: தமிழக முதல்வர், பட்டு விவசாயிகளின் நலன் கருதி, 2021ல், ராசிபுரம் பகுதியில் அரசு பட்டுக்கூடு அங்காடி நிறுவ உத்தரவிட்டார். இது தமிழகத்தின், 17வது அரசு பட்டுக்கூடு அங்காடி. தற்போது, நாமக்கல், கரூர் மாவட்டங்கள் மட்டுமின்றி, திருச்சி, கரூர், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் உற்பத்தியாகும் பட்டுக்கூடுகளும், இங்கு பெருமளவில் சந்தைப்படுத்தப்படுகிறது. அதன்படி, 2021 முதல் இதுவரை, 400 டன் அளவிற்கு பட்டுக்கூடுகள் உற்பத்தி செய்யப்பட்டு, 16.49 கோடி ரூபாய் மதிப்பில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 2,230 பட்டு விவசாயிகளுக்கு, 14.90 கோடி ரூபாய் மதிப்பில் நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.தற்போதுள்ள அரசு பட்டுக்கூடு அங்காடியில் போதுமான இடவசதி இல்லாததால், அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகமாக மேம்படுத்த, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி, 2.20 கோடி ரூபாயில், புதிய ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் அமைய உள்ளது. இதை, தமிழக அமைச்சர்கள் அடிக்கல் நாட்டி துவங்கி வைக்க உள்ளனர். மேலும், 147 விவசாயிகளுக்கு, 75 லட்சம் ரூபாய் மதிப்பில் பட்டு வளர்ப்பு கருவி உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அட்மா குழு தலைவர் ஜெகநாதன், உதவி இயக்குனர் நிஷாந்தி பங்கேற்றனர்.