ஆன்லைன் வர்த்தக போட்டிக்கு நாமக்கல் 360 செயலி துவக்கம்
நாமக்கல், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், மாவட்ட இளைஞர் அணி சார்பில், 'நாமக்கல் 360' என்ற புதிய செயலி தொடக்க விழா, நாமக்கல்லில் நடந்தது.நாமக்கல் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பத்மநாபன் வரவேற்றார். பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமை வகித்து, 'நாமக்கல் 360 செயலியை தொடங்கி வைத்து பேசியதாவது:ஆன்லைன் வர்த்தக போட்டியை சிறு, குறு வணிகர்கள் எதிர்கொள்ளும் வகையில், இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் பொருட்கள், அவர்கள் எதிர்பார்க்கும் சலுகைகளுடன் உள்ளூர் வணிகர்கள் மூலம், அன்றைய தினமே வாடிக்கையாளர்களின் வீடு வந்து சேரும். மேலும் வாடிக்கையாளர்களும், பொதுமக்களும் இந்த செயலியை பயன்படுத்தி, உள்ளூர் வணிகர்களுக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.'நாமக்கல் 360 செயலியை வடிவமைத்த, போகோஸ் இன்னோவேசன்ஸ் சாப்ட்வேர் நிறுவன நிர்வாக இயக்குனர் தமிழ்குமரன், செயலியின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், பேரமைப்பின் இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள், வணிகர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, நாமக்கல் மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் ரிஸ்வான் செய்திருந்தார்.