17 வயதுக்கு உட்பட்டோருக்கான குழுபோட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் பள்ளி சாதனை
நாமக்கல்:பாரதியார், குடியரசு தின விளையாட்டு போட்டிகளில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்.நடப்பு, 2025--26ம் கல்வியாண்டிற்கான, பாரதியார் மற்றும் குடியரசு தின விளையாட்டு போட்டி, மாவட்டத்தில் நடந்து வருகிறது. 17 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியருக்கு, 12 வகையான போட்டிகள் நேற்று நடந்தன. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, கபடி போட்டிகள் நடந்தன. தலைமையாசிரியர் சீனிவாச ராகவன் தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். முதுகலை ஆசிரியர்கள் ஜெகதீசன், உமா மாதேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அதில், கைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், ஜெய் விகாஸ் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தது. கூடைப்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், ரெட்டிப்பட்டி பாரதி பள்ளி, இரண்டாமிடம் பிடித்தன. மேலும், கால்பந்து போட்டியில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடம், குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம் பெற்றன. நேற்று நடந்த போட்டிகளில், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல் ஸ்பெக்ட்ரம் அகாடமி, கீரம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஜெய் விகாஸ், குறிஞ்சி மேல்நிலைப்பள்ளிகள் பங்கேற்றன.இதற்கான ஏற்பாடுகளை, உடற்கல்வி இயக்குனர் செல்லம்மாள், உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணன், அன்புச்செழியன் ஆகியோர் செய்திருந்தனர்.