விபத்து நடந்தால் 100 நாட்கள் லாரியை விடுவிக்க கூடாது உத்தரவு: ரத்த செய்ய சம்மேளனம் கோரிக்கை
நாமக்கல், மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: சென்னைக்கு அருகே, சில நாட்களுக்கு முன் டூவீலரில் குழந்தையுடன் ஒரு பெண் பயணம் செய்துள்ளார்.அப்போது, குழந்தை தவறி கீழே விழுந்துள்ளது. அதே நேரத்தில், பின்னால் வந்த லாரியில் அடிபட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இச்சம்பவத்தையடுத்து, சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை நகர காவல்துறைக்கு, 'விபத்து மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தும் வாகனங்களை, 100 நாட்கள் திருப்பி ஒப்படைக்க கூடாது' என உத்தரவிட்டுள்ளார்.மனித உயிர்களின் மதிப்பை லாரி உரிமையாளர்களாகிய நாங்கள் நன்கு அறிவோம். லாரி உரிமையாளர்களாகிய நாங்களும், பொதுமக்களில் ஒருவரே. சாலை விபத்து என்பது எதிர்பாராமல் நடக்கும் ஒன்று. லாரி டிரைவரோ, பொதுமக்களோ வேண்டுமென்று விபத்தை ஏற்படுத்துவதில்லை. லாரியை இயக்கும் டிரைவர் அல்லது எதிரில் வருபவரோ செய்யும் தவறே ஒரு விபத்திற்கு காரணமாக அமைகிறது.அதனால், மேற்கண்ட இந்த உத்தரவு லாரி உரிமையாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு விபத்து நடந்தால், 100 நாட்கள் லாரியை மட்டும் விடுவிக்க கூடாது என உத்தரவிடுவது ஏற்புடையதல்ல.விபத்து நடந்தால் முறையான விசாரணைக்கு பின், குற்றம் இருப்பின் அதற்கான தண்டனையை வழங்க வேண்டும். 100 நாட்கள் ஒரு வாகனத்தை நிறுத்தி வைப்பதால், அதன் உரிமையாளர் வாகனத்தின் மாதாந்திர தவணை, தன் குடும்பத்தின் வாழ்வாதாரம் என கடும் நிதிச்சுமைக்கு ஆளாவார். அவற்றை கருத்தில்கொண்டு, உத்தரவை திரும்ப பெற வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.