உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / அர்த்தநாரீஸ்வரர் கோவில் அர்ச்சகர்களை தகுதியற்றவர்கள் என கூறுவதால் வேதனை

அர்த்தநாரீஸ்வரர் கோவில் அர்ச்சகர்களை தகுதியற்றவர்கள் என கூறுவதால் வேதனை

திருச்செங்கோடு, 'தகுதிச்சான்று வழங்கியுள்ள அர்ச்சகர்களை, அதிகாரபூர்வமற்ற அர்ச்சகர்கள் என, கோவில் உதவி ஆணையாளர் கூறியது வேதனையளிக்கிறது' என, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் ஆதிசைவ அர்ச்சகர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பல நுாற்றாண்டு காலமாக கருவறையில் மரகதலிங்கம் பூஜிக்கப்பட்டு வருகிறது. இதை, முறை அர்ச்சகர்கள், 150 பேர் சுழற்சி முறையில் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், பொதுநல வழக்கு தொடர்ந்ததன் காரணமாக, இக்கோவில் அர்ச்சகர்களை அதிகாரபூர்வமற்ற அர்ச்சகர்கள் என, கோவில் உதவி ஆணையாளரே கூறுவது வேதனையளிக்கிறது.இக்கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களின் அன்றாட பணி, தினசரி பூஜை பொருட்கள் வழங்கும் பட்டியல், அன்றாட முறை அர்ச்சகர்களின் கையொப்பமிட்ட ஆவணங்கள் உள்ளிட்டவை அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், விசேஷ நாட்களில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆபரணங்களை, கையெழுத்திட்டு பெற்று திரும்ப ஒப்படைக்கும் ஆவணங்களும் அலுவலகத்தில் இருக்கின்றன. இதற்கு முன் இக்கோவில் குறித்த பொதுநல மற்றும் தனிப்பட்ட வழக்குகளில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளில், உள்துறை பணியாளர்கள் எனக்குறிப்பிட்டுள்ள ஆவணங்களும் அலுவலகத்தில் உள்ளன.உண்மை இவ்வாறு இருக்க, போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு மேற்கண்ட ஆவணங்களை ஆதாரமாக காட்டி, பொதுநல வழக்கை முடித்து வைத்திருக்கலாம். ஆவணங்களை தேவஸ்தான நிர்வாகம் போலீசாருக்கு சமர்ப்பிக்காமல், அர்ச்சகர்கள் மீது பழிபோட்டு காலம் தாழ்த்துவதற்கு காரணம் என்னவென்று புரியவில்லை. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ