ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க மக்கள் எதிர்ப்பு
ஊராட்சிகளை நகராட்சியுடன்இணைக்க மக்கள் எதிர்ப்புராசிபுரம், அக்.11-ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளை, நகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராசிபுரம் நகராட்சி மற்றும் பிள்ளாநல்லுார் டவுன் பஞ்சாயத்து ஆகியவை தரம் உயர்த்துவதற்கான திட்டவுரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ராசிபுரம் ஒன்றியத்தில் உள்ள சந்திரசேகரபுரம், கவுண்டம்பாளையம், முத்துக்காளிப்பட்டி உள்ளிட்ட, ஆறு ஊராட்சிகளை ராசிபுரம் நகராட்சியுடனும், முருங்கப்பட்டி, கூனவேலம்பட்டி, குருக்கபுரம் உள்ளிட்ட, ஐந்து ஊராட்சிகளை பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்துடனும் இணைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கு இப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இணைப்பை கண்டித்து ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட பா.ஜ., - தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட, 11 ஊராட்சி மன்ற தலைவர்கள் ராசிபுரம் நகராட்சி, டவுன் பஞ்சாயத்துடன் இணைக்கும் முடிவை ரத்து செய்யக்கோரி, ராசிபுரம் பி.டி.ஓ., மலர்விழி, ஒன்றிய தலைவர் ஜெகநாதன் ஆகியோரிடம் மனு அளித்தனர்.குருக்கபுறம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ் கூறுகையில்,'' ஊராட்சிகளை ராசிபுரம் நகராட்சியுடன் இணைத்தால், பல்வேறு சலுகைகள் கிடைக்காது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணிபுரிய முடியாது.இது போல் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே இணைப்பு முடிவை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளோம். அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்,'' என்றார்.