இலவச வேட்டி, சேலை எண்ணிக்கையை உயர்த்தி முழுமையாக வழங்க முதல்வருக்கு மனு
ஈரோடு :கடந்தாண்டு போல, முழு அளவில் இலவச வேட்டி, சேலைகளின் எண்ணிக்கையை உயர்த்தி பணி வழங்க கோரி, முதல்வர், கைத்தறித்துறை அமைச்சருக்கு, தமிழ்நாடு நெசவாளர் சங்க கூட்டமைப்பு அமைப்பாளர்கள் கந்தவேல், சுப்பிரமணியம் மனு அனுப்பினர்.மனு விபரம்:தமிழக அரசு பொங்கல் பண்டிகையின்போது, 1.77 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச வேட்டி, சேலைகளை வழங்கி வருகிறது. நடப்பாண்டு, 2.17 கோடி பேருக்கு வழங்க, பொது வினியோக திட்டம், கோ-ஆப்டெக்ஸ் மூலம் யோசனை தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம், 240க்கும் மேற்பட்ட விசைத்தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களை சேர்ந்த, 65,000க்கும் மேற்பட்ட விசைத்தறி, அதை சார்ந்த பல லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக, மறைமுகமாக வேலைவாய்ப்பு பெறுவர். கடந்தாண்டு தாமதமாக ஆர்டர் வழங்கி, மீதமான, 31 லட்சம் சேலை, 33 லட்சம் வேட்டிகளை இருப்பு வைத்து, இந்தாண்டுக்கான ஆர்டரில் நீக்கி, 1.44 கோடி வேட்டி, 1.46 கோடி சேலைக்கு மட்டுமே ஆர்டர் வழங்கப்பட்டது.முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு தனியாக உற்பத்தி செய்ய முடிவானதால், 1.29 கோடி வேட்டி, 1 கோடி சேலை என உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூனில் உற்பத்தி துவங்கியதால் அக்., 20க்குள் வேட்டியும், நவ.,2வது வாரம் சேலை உற்பத்தியும் முடியும். நுகர்பொருள் வாணிப கழக யோசனைப்படி தலா, 2.17 கோடி வேட்டி மற்றும் சேலை என கணக்கிட்டு அல்லது கடந்தாண்டு போல ஆர்டர் வழங்க வேண்டும். இதன் மூலம் நெசவாளர்கள் ஆறு மாதத்துக்கான வேலை வாய்ப்பு பெறுவர். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.