உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பழங்குடியினர் நல பள்ளிகளில் விடைத்தாள் திருத்தம் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த அமைச்சரிடம் மனு

பழங்குடியினர் நல பள்ளிகளில் விடைத்தாள் திருத்தம் அந்தந்த பள்ளிகளிலேயே நடத்த அமைச்சரிடம் மனு

நாமக்கல், டிச. 11-நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் ராமு, தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தனிடம் மனு அளித்துள்ளார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, தற்போது அரையாண்டு தேர்வு நடக்கிறது. கடந்த, 3ல், பழங்குடியினர் நல பள்ளிகள் துறை உதவி இயக்குனர் குமரகுருபரன், அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனுப்பியுள்ள தகவலில், 'தற்போது நடக்கும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை, சேலத்தில் மையம் அமைத்து மதிப்பீடு செய்ய வேண்டும்; தற்போது பாடம் நடத்தக்கூடிய அந்தந்த பள்ளி ஆசிரியர்களே, மாணவர்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யக்கூடாது' என, உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளை பொறுத்தவரை, மாணவர்களின் தேர்வு சார்ந்த மனநிலை மற்றும் அவர்களது தேர்வு எழுதும் திறன்களை ஆசிரியர் கணிப்பதற்கும், மாணவர்களுக்கு எந்த பயிற்சி அளிக்கலாம் என திட்டமிடுவதற்கும், மாணவர்கள் எழுதக்கூடிய காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தேர்வுகளில், மாணவர்களின் விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களே திருத்தும் போது, மாணவன் வினாக்களுக்கு விடையளிக்கும் பகுதியில், எந்தெந்த பகுதியில் அவன் சிறப்பாக தேர்வு எழுதுகிறான்; எந்தெந்த பகுதியில் விடையளிக்க திணறுகிறான்; எந்தெந்த பகுதிக்கு விடை அளிக்கவில்லை; அவனுக்கு எந்தெந்த பகுதியில், கூடுதலாக பயிற்சி அளிக்க வேண்டும் போன்ற திட்டமிடல்கள் சார்ந்து பாட ஆசிரியரின் மனதிலும் பதியும்.மேலும், மாணவனின் விடைத்தாளிலும் ஆசிரியர் குறிப்பு எழுதி அதன் அடிப்படையில் விடைத்தாளை வழங்கும்போது, அந்த மாணவர்களை தனியாக பிரித்து, அதற்கேற்றபடி வகுப்பில் பாட பயிற்சிகளை வழங்கி, அவர்களை பொது தேர்வில் தேர்ச்சி பெற வைப்பர். இதுதான் காலம் காலமாக நடந்து வருகிறது.அரையாண்டு தேர்வு விடைத்தாள்களை பொறுத்த அளவில், பள்ளிக்கல்வித்துறையில் பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட பள்ளி பாட ஆசிரியர்களே அதை மதிப்பீடு செய்து வருகின்றனர். ஆனால், இதற்கு முரணாக, பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்களை, சேலத்தில் பொதுத்தேர்வு மையம் அமைத்து, விடைத்தாள்களை மாற்றி திருத்தம் செய்ய வேண்டும் என்ற அறிவிப்பு, இதுவரை தமிழகத்திலும், வேறு பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட எந்த துறையிலும் இல்லாத ஒன்று. அதனால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், இப்பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுத்து, பழங்குடியினர் நலத்துறை பள்ளி, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்களை, அந்தந்த பள்ளி பாட ஆசிரியர்களே மதிப்பீடு செய்யலாம் என்ற அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை