உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பசுமை தமிழகம் இயக்கம் சார்பில்2 ஆண்டில் 20 லட்சம் மரக்கன்று நடவு

பசுமை தமிழகம் இயக்கம் சார்பில்2 ஆண்டில் 20 லட்சம் மரக்கன்று நடவு

sநாமக்கல்:''பசுமை தமிழகம் இயக்கம் சார்பில், நாமக்கல் மாவட்டத்தில், 2023ல், 10.21 லட்சம் மரக்கன்று கள், 2024ல், 9.75 லட்சம் மரக்கன்றுகள் என, மொத்தம், 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் உமா பேசினார்.நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பி.டி.ஓ., அலுவலகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், மரக்கன்று நடும் விழா மற்றும் சட்டப்பணிகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி தலைமை வகித்தார்.கலெக்டர் உமா முன்னிலை வகித்து பேசியதாவது:ஏழை, எளிய மக்களுக்கும், அனைத்து சட்ட உதவிகளும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கிலும், தினந்தோறும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. தமிழகத்தில், வனப்பரப்பை அதிகப்படுத்தவும், பசுமை போர்வையை விரிவுபடுத்தும் வகையில், 'பசுமை தமிழகம் இயக்கம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில், வனம் மற்றும் பசுமை பரப்பை, 33 சதவீதமாக உயர்த்துவது தான் இதன் முக்கிய நோக்கம். மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மரம் வளர்ப்பிற்கு ஊக்குவிப்பது இந்த இயக்கத்தின் நோக்கம்.நாமக்கல் மாவட்டத்தில், வனம் மற்றும் பசுமை பரப்பு, 14 சதவீதமாக உள்ளது. அவற்றை, 33 சதவீதமாக உயர்த்த, மாவட்ட நிர்வாகம் சார்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 'பசுமை தமிழகம் இயக்கம்' சார்பில், நாமக்கல் மாவட்டத்தில், 2023ல், 10.21 லட்சம் மரக்கன்றுகள், 2024ல், 9.75 லட்சம் மரக்கன்றுகள் என, மொத்தம், 20 லட்சம் மரக்கன்றுகள் வனத்துறை, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் நடப்பட்டுள்ளன. மரக்கன்றுகள் நடப்பட்டு, தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மழை பொழிவிற்கு மரங்கள் இன்றியமையாத ஒன்று. ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு மரக்கன்றுகளை நட்டு தொடர்ந்து முறையாக பராமரிக்க முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தலைமை குற்றவியல் நடுவர் விஜயகுமார், கூடுதல் எஸ்.பி., விஜயராகவன், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் திருகுணா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் வேலுமயில், நீதிபதிகள், துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை