வாய்க்கால் நீரை பயன்படுத்தி நெற்பயிர் நடவு
பள்ளிப்பாளையம்:மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் ஆண்டுதோறும் நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். இதை பயன்படுத்தி சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 45,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.பள்ளிப்பாளையத்தில், மோளகவுண்டம்பாளையம், எலந்தகுட்டை, சின்னார்பாளையம், தெற்குபாளையம், களியனுார், சமயசங்கிலி, ஆலாம்பாளையம், புதுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மட்டும், 10,000 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்தாண்டு, கடந்த ஜூலை மாதத்தில் இருந்து பாசனத்திற்கு, மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. வாய்க்காலில் டிசம்பர் மாதம் வரை தண்ணீர் வரும்.வாய்க்காலில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், பள்ளிப்பாளையம் சுற்றுவட்டாரத்தில் விவசாயிகள் நெல் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதல்கட்ட பணியாக, வயல்வெளிகளில் தண்ணீர் பாய்ச்சி, நிலத்தை உழவு மற்றும் வரப்பை சீரமைத்தனர்.தற்போது நடவு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. வாய்க்காலில் தண்ணீர் வருவதாலும், பருவமழை பெய்து வருவதாலும், இந்தாண்டு நெல்சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.