போலீசார் சார்பில் தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு பேரணி
ப.வேலுார், போலீசார் சார்பில், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்புணர்வு பேரணி, நேற்று முன்தினம் நடந்தது. ப.வேலுார் கால்நடை மருத்துவமனை அருகே துவங்கிய பேரணியை, டி.எஸ்.பி., சங்கீதா தலைமை வகித்து துவக்கி வைத்தார். ப.வேலுார் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ்.ஐ., சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரணியில், அரசு, அரசு உதவி பெறும் நிறுவனங்களில் இருந்து தகவல்களை மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட இச்சட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து, பதாகைகள் ஏந்தி, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து, டி.எஸ்.பி., சங்கீதா கூறுகையில், ''கடந்த, 2005ல் தகவல் அறியும் உரிமை சட்டம் இயற்றப்பட்டது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் உள்ள பொது தகவல் அலுவலரிடம் தகவல் கேட்கலாம். தகவல் கேட்பதற்கு ஒரு வெள்ளை தாளில் எழுதி சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பொது தகவல் அலுவலர், மனுதாரர் கோரிய விபரங்களை பெற்றுத்தருவார். பொது தகவல் அலுவலர் அளித்த பதில் திருப்தியில்லை எனில், தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மேல்முறையீடு செய்யலாம். ஆணையம் தகவலை பெற்றுத்தரும். இதன் மூலம் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து, பொதுமக்கள் அறிய முடியும்,'' என்றார். பின், தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்து உறுதிமொழியை, டி.எஸ்.பி., சங்கீதா வாசிக்க மாணவ, மாணவியர், அலுவலர்கள் உறுதிமொழியேற்றனர்.