உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை தயாரிக்கும் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை தயாரிக்கும் பணி தீவிரம்

நாமக்கல், ஜன. 4-பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் அருகே பானை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.தை முதல் நாள், பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகையில், மண் பானை, கரும்பு, மஞ்சள் ஆகியவை முக்கிய இடம் பெறும். அன்றைய தினம், மண் பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபடுகின்றனர்.கிராமப்புறங்களில் மட்டும் மல்லாமல், நகர் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்குவதால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மண்பானை தொழிலாளர்கள் தங்களது உற்பத்தியை அதிகரித்துள்ளனர்.அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், போடிநாயக்கன்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி, ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், வளையப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எருமப்பட்டி ஒன்றியம், போடிநாயக்கன்பட்டி, வடக்கு தெருவில் வசிக்கும் சிவசாமி குடும்பத்தினர் பானை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து, பானை தயாரிக்கும் சிவசாமி கூறியதாவது:எங்கள் பகுதியில் தயாரிக்கப்படும் பானைகளுக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. பானை தயாரிக்க நபர் ஒருவருக்கு, 30 நிமிடம் ஆகும்.அதை தொடர்ந்து உலர்த்தி பின் சூளையிட்டு முழுமை பெற ஒரு நாள் ஆகும். நாளொன்றுக்கு, 20 முதல், 40 பானைகள் தயாரிக்கிறோம். பானை விலை, 1 படி அளவு கொண்டது, 100 முதல், 150 ரூபாய்; 2 படி அளவு, 200 ரூபாய்; 3 படி அளவு, 250 ரூபாய்; 5 படி அளவு, 450 ரூபாய், மூடி, 30 ரூபாய், குழம்பு சட்டி, 50 ரூபாய், பெரிய சைஸ் அடுப்பு, 250 ரூபாய், இரட்டை அடுப்பு, 300 ரூபாய் என விற்பனை செய்கிறோம். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி