கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு கூட்டப்பள்ளி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அடுத்த கூட்டப்பள்ளி காலனி ஏரிக்கரையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் வீடுகளில் கருப்பு கொடியேற்றி போராட்டம் நடத்தினர்.திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் கூட்டப்பள்ளி காலனி அமைந்துள்ளது. இங்கு 5,000 வீடுகள் உள்ளன. கூட்டப்பள்ளி ஏரியில் தேங்கும் தண்ணீர் காரணமாக தான் சுற்று பகுதியில் உள்ள போர்வெல்களில் தண்ணீர் உள்ளது.தற்போது கூட்டப்பள்ளி ஏரி பகுதியில், குப்பைகள் கொட்டி வைத்ததால், ஏரி சுருங்கி கழிவு நீர் ஓடை போல் மாறிவிட்டது. பொதுமக்களின் தொடர் போராட்டங்கள் அடுத்து கூட்டப்பள்ளி பகுதியில் நகராட்சி குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது.இந்நிலையில் திருச்செங்கோடு நகராட்சி சார்பில் ரூபாய், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூட்டப்பள்ளி பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர், அப்பகுதியை பார்வையிட்டார்.இதை அறிந்த கூட்டப்பள்ளி பகுதியினர், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்.டி.ஓ., மற்றும் திருச்செங்கோடு நகராட்சி கமஷனர் ஆகியோரிடம் மனுக்கொடுத்தனர்.இரண்டாம் கட்ட போராட்டமாக நேற்று கூட்டப்பள்ளி பகுதியில் உள்ள அனைத்து வீடுகள், கடைகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.மக்கள் நல அமைப்பின் தலைவர் பத்மநாபன் கூறியதாவது.கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால் கொசுதொல்லை அதிகரிக்கும், சுற்றுசூழல் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து, அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். இரண்டாம் கட்டமாக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். அடுத்தகட்டமாக உண்ணாவிரதம், சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு கூறினார்.