அமெரிக்கா வரி விதிப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாமக்கல் :அமெரிக்கா வரி விதிப்பை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சி.பி.ஐ.எம்., மாவட்ட குழு செயலாளர் கந்தசாமி, மாவட்ட குழு உறுப்பினர் வெங்கடேசன், சி.பி.ஐ., திருச்செங்கோடு நகர செயலாளர் சுகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.அதில், அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால், இந்திய நாட்டின் ஜவுளி, பின்னலாடை, ஆயத்த ஆடைகள், ஆபரணங்கள், இறால், தோல், தோல் பொருட்கள், மின்சார இயந்திர சாதனங்கள் என பல பிரிவுகளில், உற்பத்தி மற்றும் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்படும்.நாட்டின் சுய பொருளாதாரத்தை கடுமையாக தாக்கி, நவீன காலனி ஆதிக்க பிடியில் நாட்டை சுற்றி வளைக்கும் டிரம்ப் அரசின் வரிவிதிப்பு தாக்குதலை, உறுதியுடன் மத்திய அரசு எதிர்கொள்ள வேண்டும்.ஏற்றுமதி தொழில்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து, உற்பத்தி தொழில்களை பாதுகாக்க மானியம், வரிச்சலுகை உள்ளிட்ட மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தியும், அமெரிக்க அரசின் அடாவடி வரிவிதிப்பு கொள்கையை கண்டித்தும், கோஷம் எழுப்பினர்.