அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள் சரமாரி புகார்: அதிகாரிகளுக்கு டோஸ்
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை யூனியனில், நேற்று பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கும் விழாவில் அமைச்சர் மதிவேந்தன் கலந்துகொண்டார். விழா முடிந்து காருக்கு சென்ற அமைச்சரை, அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டனர்.அவர்கள், 'இப்பகுதியில் கழிவறை கட்ட கட்சி நிர்வாகி ஒருவர் தடுப்பதாகவும், சாலை வசதி இல்லை எனவும் கூறினர். மேலும், இப்படியே எங்களை கண்டுகொள்ளாமல் சென்றால் இனிமேல், தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட மாட்டோம். நாங்கள் பக்கா தி.மு.க., தான். ஆனால், இனிமேல் ஓட்டுப்போட மாட்டோம்' என்றனர்.இதைக்கேட்ட அமைச்சர் மதிவேந்தன், அதிருப்தியடைந்தார். உடனே அங்கிருந்த பி.டி.ஓ., கஜேந்திர பூபதி, இன்ஜினியர் நைனாமலை ராஜன் ஆகியோரை அழைத்து, ''பொதுமக்கள் பிரச்னையை தீர்க்க முடியுமா? முடியாதா? மூன்று நாட்களில் பிரச்னையை தீர்க்கவில்லை என்றால், உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்,'' என, செம டோஸ் விட்டார்.அப்போது, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, தி.மு.க., மாவட்ட பொருளாளரான பாலச்சந்தர், பெண்களை பார்த்து, 'குறையை சொல்லுங்கள்; ஓட்டுப்போட மாட்டோம்னு ஏன் சொல்ரீங்கன்னு' மிரட்டும் தொனியில் பேசினார். இதனால், பெண்கள் இன்னும் சத்தமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.