சூரிய மின் ஒளி திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு
ராசிபுரம், ராசிபுரத்தில், மத்திய அரசின் சூரிய மின் ஒளி திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.நாடு முழுவதும் வீட்டு பயன்பாட்டிற்கு, மானிய விலையில் சூரிய மின் ஒளி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. வீடுகளில், சூரிய மின் ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பேனல்களை பொருத்தினால், 3 கிலோ வாட் வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், மிக குறைந்த அளவு வீடுகளில் மட்டுமே சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களிடம் மின் வாரியத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.ராசிபுரம் மின் பகிர்மான கோட்டம் சார்பில், பிரதமரின் சூரிய மின் ஒளித்திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நாமக்கல் கோட்ட மேற்பார்வை பொறியாளர் சபாநாயகன் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். இதில், சூரிய மின் ஒளி திட்டத்தின் பயன்கள், அதனால் கிடைக்கும் பொருளாதார லாபம், திட்டங்கள், மானியங்கள் குறித்து விழிப்புணர்வு நோட்டீசை பொதுமக்களிடம் வழங்கினர். இந்த விழிப்புணர்வு பேரணி சேலம் சாலையில் தொடங்கி, கடைவீதி, ஆத்துார் பிரதான சாலை, பழை பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்றது. மின்பகிர்மான பணியாளர்கள், சோலார் திட்ட ஒப்பந்ததாரர்கள் என, 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி பகுதிகளில் பொதுமக்கள் அதிகளவு விசாரித்து தகவல்களை தெரிந்து கொண்டனர்.