சவுதாபுரத்தில் குடிநீர் பற்றாக்குறை தினமும் அவதிப்படும் பொதுமக்கள்
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட சவுதாபுரம் பஞ்., பகுதியில் குடிநீர் சீராக வராததால், அப்பகுதி மக்கள் தண்ணீருக்காக அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இதுகுறித்து, சவுதாபுரம் பஞ்., முன்னாள் தலைவர் நந்தகோபாலன் கூறியதாவது:சவுதாபுரம் பஞ்., பகுதியில் காவிரி ஆற்றின் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம், சவுதாபுரம் பஞ்., பகுதியில் உள்ள மொத்தம், 18 மேல்நிலை தொட்டிகளுக்கு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் ஏற்றப்பட்டு, மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த, 20 நாட்களாக நாள் ஒன்றிற்கு, 60,000 லிட்டர் தண்ணீர் தான் வந்து கொண்டிருக்கிறது.இதற்கு முன் நாள் ஒன்றிற்கு, 4.7 லட்சம் லிட்டர் காவிரி ஆற்று தண்ணீர் கொடுக்கப்பட்டது. காவிரி ஆற்று தண்ணீர் முற்றிலுமாக குறைக்கப்பட்டதால், சவுதாபுரம் பஞ்சாயத்து பகுதியில் உள்ள சலவையாளர் காலனி, கொல்லப்பட்டி உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு போதுமான காவிரி நீர் வழங்கப்படுவதில்லை.மேலும், சவுதாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு காவிரி ஆற்று குடிநீர் கிடைப்பதில்லை. ஆற்று தண்ணீர் பற்றாக்குறையால், ஆழ்துளை கிணறு மூலமாக நிலத்தடி நீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்படுகிறது. நிலத்தடி நீர், உப்பு நீராக இருப்பதால் குடிப்பதற்கு ஏற்ற நீராக இருப்பதில்லை. சவுதாபுரம் அரசு மேல்நிலை பள்ளியில், 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த உப்பு நீரை குடிக்கு முடியாமல் மாணவர்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, காவிரி ஆற்று தண்ணீரை முழுமையாக மக்களுக்கு தேவையானளவு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.