கட்டுமான தொழிலாளர் வீடு கட்ட தலா ரூ.4 லட்சம் வீதம் ரூ.400 கோடி ஒதுக்கீடு: வாரிய தலைவர் தகவல்
நாமக்கல்:''கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட, தலா, நான்கு லட்சம் ரூபாய் வீதம், 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார் பேசினார்.நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன்குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், 43 தொழிலாளர்களுக்கு, 28.88 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:தமிழகத்தில் மட்டும் தான் கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட, 18 வகையான வாரியங்கள், தொழிலாளர் துறையின் கீழ் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில், 1994-ல் கட்டுமான தொழிலாளர் வாரியம் அமைக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, உலகளவில் காலநிலை மாற்றம் மிக முக்கிய பிரச்னையாக உள்ளது. காலநிலை மாற்றம், அதிக வெப்பம், அதிக மழைப்பொழிவு காரணமாக கட்டுமான தொழிலாளர்களும், விவசாயிகளும் அதிகளவில் பாதிப்படைகின்றனர்.இந்தியாவிலேயே முதன்முறையாக வெப்பத்தால் உயிரிழந்தவர்களுக்கு, தமிழகத்தில் தான், நான்கு லட்சம் ரூபாய் மரண உதவித்தொகை வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், கட்டுமான தொழிலாளர்களுக்கு வீடு கட்ட, தலா, நான்கு லட்சம் ரூபாய் வீதம், 400 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, 3,000 தொழிலாளர்களுக்கு வீடுகட்ட ஆணை வழங்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 104 தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ஆணை வரப்பெற்றுள்ளது. விரைவில், 1,000 தொழிலாளர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.