ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள், பழங்கள் விற்பனை ஜோர்
ஆயுத பூஜையை முன்னிட்டுபூக்கள், பழங்கள் விற்பனை ஜோர்நாமக்கல், அக். 11-ஆயுத பூஜை விழா இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, ஜிகினா தோரணங்கள், மாவிலை, பொரி, சாம்பல் பூசணி, பூக்கள், பழங்கள், வாழைக்கன்றுகள் விற்பனை நேற்று மும்முரமாக நடந்தது. நடப்பாண்டு கடந்த, 3ம் தேதி நவராத்திரி கொலு தொடங்கியது. இதனையொட்டி வீடுகள், வணிக நிறுவனங்கள், கோவில்களில் கொலு பொம்மைகளை அலங்கரித்து வைத்து பக்தர்கள், பொதுமக்கள் வழிபாடு செய்தனர்.ஆயுத பூஜை விழா இன்று கொண்டாடப்படுகிறது. நாமக்கல்-மோகனுார் சாலை, பரமத்தி சாலை, சேலம் சாலை, கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாழைக்கன்றுகள், சாம்பல் பூசணிக்காய், பூக்கள், பழங்கள், பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஜிகினா தோரண அலங்கார பொருள்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றன. மாலை நேரத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. வாழைக்கன்று சிறிய அளவில் ஒரு ஜோடி, 50 ரூபாய், வாழைதாருடன் மரம், 500 ரூபாய், சாம்பல் பூசணிக்காய் கிலோ, 35 ரூபாய், பொரி மற்றும் கடலை கிலோ, 60 ரூபாய் முதல் விற்பனையானது.இவை தவிர தேங்காய், வாழைப்பழம், ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள் உள்ளிட்ட பழவகைகளும் அதிகம் விற்பனை செய்யப்பட்டது. லாரி பட்டறைகள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களை துாய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். வாகனங்களை சர்வீஸ் ஸ்டேஷனில் கொண்டு சென்று கழுவினர். இன்று காலை நிறுவனங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. * ஆயுத பூஜையை ஒட்டி ராசிபுரம், நாமகிரிப்பேட்டை பகுதியில் வாழை மரம், மா இலை, பூ, பொரி உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. வாழை மரங்கள் ஜோடி, 50 ரூபாய், மா இழை, 20 முதல் விற்பனை செய்தனர். மற்ற நாட்களில், 100 ரூபாய்க்கு விற்ற பூ மாலை நேற்று, 200 ரூபாய் வரை விற்றது.ராசிபுரத்தில் நேற்று மதியம் முதல் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. விடுமுறைக்கு அனைவரும் சொந்த ஊருக்கு வருவதால், பஸ்களிலும் கூட்டம் அதிகம் உள்ளது. அதேபோல், ராசிபுரம் கடைவீதியில் மக்கள் கூட்டம், போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது.