கொல்லிமலை அனைத்து வணிகர் சங்க உறுப்பினர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம்
நாமக்கல், தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், இணைப்பு சங்கமான கொல்லிமலை அனைத்து வணிகர் நலச்சங்கம் மற்றும் உணவு பாதுகாப்பு துறை சார்பில், சிறப்பு பயிற்சி முகாம், கொல்லிமலை ஒன்றியம், செம்மேட்டில் நடந்தது. கொல்லிமலை அனைத்து வணிகர் நலச்சங்க தலைவர் வருணன் தலைமை வகித்தார். செயலாளர் பூபதி வரவேற்றார். தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின், நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், முகாமை துவக்கி வைத்து பேசினார்.அப்போது, ''உணவு பாதுகாப்புத்துறை சட்டங்களை புரிந்துகொண்டு, பாதுகாப்புடன் வணிகம் செய்ய வேண்டும். அனைத்து வணிகர்களும், வரும், 30க்குள், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில், கட்டணமில்லாமல் உறுப்பினர்களாக இணைந்து பயன்பெற வேண்டும்,'' என்றார். உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜா, 'போஸ்டாக்' சான்றிதழ் பெறுவதன் அவசியம் குறித்தும், உணவு பாதுகாப்பு சட்டங்கள் பற்றியும் விளக்கினார்.பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன் வீரக்குமார், துணை தலைவர் உதயகுமார், ஒருங்கிணைப்பாளர் கோபாலகிருஷ்ணன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் பத்மநாபன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருணாகரன், பொருளாளர் தென்னவன் உள்பட பலர் பங்கேற்றனர்.