ஆன்மிக சுற்றுலா: பக்தர்களுக்கு அழைப்பு
நாமக்கல்,ஆடி மாதத்தில் ஆன்மிக சுற்றுலா செல்ல, ஈரோடு மண்டல ஹிந்து சமய அறநிலையத்துறை பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஹிந்து சமய அறநிலையத்துறையின், ஈரோடு மண்டலத்திற்குட்பட்ட ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற, ஐந்து அம்மன் கோவில்களுக்கு ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை ஆன்மிக சுற்றுப்பயணம் அழைத்துச்செல்லப்படும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவித்திருந்தார். இதையடுத்து, முதல் கட்டமாக கடந்த மாதம், 18ல் ஈரோடு மண்டலத்தில் தேர்வு செய்யப்பட்ட, 60 பக்தர்கள் ஆன்மிக பயணம் அழைத்துச்செல்லப்பட்டனர். அதேபோல், கடந்த, 25, ஆக., 1 (நே்றறு) ஆகிய நாட்களில், தலா, 60 பேர் அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர். இதேபோல், வரும், 8, 15ம் தேதிகளில், ஆன்மிக பயணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்மிக பயணம் மேற்கொள்ள விரும்பும் பயனாளிகள், ஈரோடு ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம், நாமக்கல் மற்றும் ஈரோட்டில் உள்ள உதவி ஆணையர் அலுவலகங்கள், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் அலுவலகங்கள், சரக ஆய்வாளர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.மேலும், www.hrce.tn.gov.inஎன்ற ஹிந்து சமய அறநிலையத்துறை இணைய தளத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள், 60 வயதில் இருந்து, 70 வயதிற்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். உடல் தகுதி குறித்து மருத்துவரின் சான்றுடன் ஆதார் அட்டை நகல் இணைக்க வேண்டும். இதுபோல் அறுபடை வீடுகளுக்கான ஆன்மிக பயணத்திற்கான விண்ணப்பங்களும் மேற்படி இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணபிக்கலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.