ஒரே நாளில் பள்ளி மாணவன் உள்பட 8 பேரை கடித்து குதறிய தெரு நாய்
ராசிபுரம், ராசிபுரம் அருகே பள்ளி மாணவன் உட்பட, 8 பேரை ஒரே நாளில் தெரு நாய் கடித்து குதறியுள்ளது. ராசிபுரம் அடுத்த பட்டணம் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட, திருவள்ளுவர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, 9;00 மணியளவில் அப்பகுதியில் நடந்து சென்ற சிறுவர்கள், பள்ளி மாணவன், பெரியவர்கள் என உட்பட, 8 பேரை தெரு நாய் ஒன்று கை, கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடித்து குதறியது. குழந்தைகள் கதறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து டவுன் பஞ்சாயத்து நிர்வாகத்திடம், பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பட்டணம் மட்டும் இன்றி, ராசிபுரம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ்நிலையம், எல்.ஐ.சி., பகுதி உள்ளிட்ட இடங்களில் தெரு நாய்கள் அதிகளவு சுற்றித்திரிகின்றன. இதனால், இவ்வழியாக செல்ல பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள் பயப்படுகின்றனர். எனவே, தெருவில் சுற்றும் நாய்களை கட்டுப்படுத்த, உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.