எல்.பி.ஜி., டேங்கர் லாரிகளுக்கு கட்டுப்பாடு தளர்த்தாவிட்டால் ஸ்டிரைக் என அறிவிப்பு
நாமக்கல்,:''புதிய டெண்டரில் உள்ள கட்டுப்பாடுகளை மார்ச் 20க்குள் தளர்த்தாவிட்டால், டேங்கர் லாரிகளை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை,'' என, எல்.பி.ஜி., டேங்கர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் எச்சரித்துள்ளார்.நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி., டேங்கர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தரராஜன் கூறியதாவது:தென்மண்டல எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம், நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக, 5,514 எல்.பி.ஜி., புல்லட் டேங்கர் லாரிகள் உள்ளன. இவை அனைத்தும், மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.ஓ.சி., - பி.பி.சி., - எச்.பி.சி., ஆகிய ஆயில் நிறுவனங்களின் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து, சமையல் காஸ் சிலிண்டர் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு காஸ் லோடு ஏற்றிச்செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.கடந்த ஒப்பந்தத்தில், 5,514 எல்.பி.ஜி., டேங்கர் லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டிருந்தது. தற்போதைய அறிவிப்பில், 3,478 லாரிகள் மட்டுமே ஒப்பந்தம் கோரி விண்ணப்பிக்கலாம் என, ஆயில் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனால், 2,036 லாரிகளுக்கு வேலை இழப்பு ஏற்படுவதுடன், லாரிகளை இயக்க முடியாமல் நிறுத்தி வைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், 21 டன் எடையுள்ள காஸ் ஏற்றும் மூன்று ஆக்ஸில் லாரிகளுக்கு முன்னுரிமை என்ற விதியை ஆயில் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால், சங்கத்தில் உள்ள, 5,700 லாரிகளில், 80 சதவீதம் லாரிகள், 18 டன் காஸ் ஏற்றிச்செல்லும் இரண்டு ஆக்ஸில் லாரிகள்.புதிய ஒப்பந்தத்தில் விதிகளை திருத்தம் செய்து, இரண்டு ஆக்ஸில் லாரிகளை சதவீதம் அடிப்படையிலான ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாடகை நிர்ணயம் செய்வதில், பழைய முறையை கடைப்பிடிக்க வேண்டும் என, சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைத்துள்ளோம்.சென்னையில் டெண்டருக்கு முந்தைய ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது. அதில் பங்கேற்ற டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், புதிய டெண்டரில் லாரி உரிமையாளர்களுக்கு எதிராக நிறைய பாதகங்கள் உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என, ஆயில் நிறுவன நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தனர். இந்த பேச்சில் பங்கேற்ற ஆயில் நிறுவன அதிகாரிகள், மார்ச், 20க்குள் பேசி முடிவெடுக்கப்படும் என, உத்தரவாதம் அளித்துள்ளனர். காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் கோரிக்கைகளை ஏற்காத பட்சத்தில், தென் மாநிலம் முழுதும் எல்.பி.ஜி., காஸ் டேங்கர் லாரிகளை இயக்காமல் நிறுத்தி வைப்பதை தவிர வேறு வழியில்லை.இவ்வாறு அவர் கூறினார்.