1.50 லட்சம் மின் இணைப்புகளை உடனே வழங்க மாநாட்டில் வலியுறுத்தல்
நாமக்கல்: 'தமிழகத்தில் காத்திருப்பில் உள்ள, 1.50 லட்சம் விவசாய மின் இணைப்புகளை உடனே வழங்க வேண்டும்' என, நாமக்கல்லில் நடந்த பாரதிய கிசான் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.நாமக்கல்லில், நேற்று நடந்த பாரதிய கிசான் சங்க மாவட்ட மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி வரவேற்றார். அகில பாரத துணைத்தலைவர் பெருமாள் பங்கேற்றார். அவர் பேசுகையில், ''பாரதிய கிசான் சங்கத்தின் மாவட்ட மாநாடு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. முதல் மாவட்ட மாநாடு நாமக்கல்லில் நடந்துள்ளது. மாநில மாநாடு விரைவில் மதுரையில் நடக்க உள்ளது. அகில பாரத மாநாடு, குஜராத் மாநிலத்தில் பிப்., 19, 20, 21ல் நடக்க உள்ளது. மின் இணைப்பு கேட்டு, 1.50 லட்சம் விவசாயிகள் காத்திருக்கின்றனர். காத்திருப்பில் உள்ள விவசாயிகளுக்கு மின் இணைப்பு உடனே வழங்க வேண்டும். திருமணிமுத்தாறு காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கொல்லிமலையில் மூலிகை மருத்துவ பயிர்களை பயிரிடுவதற்கான பயிற்சிகளை பழங்குடியின மக்களுக்கு அளிக்க வேண்டும்,'' என்றார்.