திறன் இந்தியா திட்டத்தில் பயிற்சி: பெண்களுக்கு சான்றிதழ் வழங்கல்
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுக்குறிச்சி பகுதியில், மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மூலம், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனத்தில் தையல் மற்றும் கணினி பயிற்சி முடித்த, 20 பெண்களுக்கு திறன் இந்தியா சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பனை விதை நடும் விழா நடந்தது.நாமக்கல் மக்கள் கல்வி நிறுவனத்தின் உதவி திட்ட அலுவலர் வடமலை வரவேற்றார். மரக்கன்றுகள் நடுவதன் பயன்கள் குறித்து, காவிரி கூக்குரல் இயக்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தரணிதரன், மங்களபுரம் கண்ணன் உள்ளிட்டோர் விளக்கி பேசினர். மேலும் இப்பகுதி கால நிலைக்கு ஏற்றவாறு சிறந்த இயற்கை முறையில் விவசாயம் செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.தொடர்ந்து நாமக்கல் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சுபாஷ், மத்திய அரசின் திறன் இந்தியா திட்டத்தின்கீழ் தையல் மற்றும் கணினி பயிற்சி முடித்த, 20 பெண்களுக்கு அதற்கான சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, முள்ளுக்குறிச்சி ஏரியை சுற்றி, 100 பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் ஆகியவற்றை பயிற்சியாளர்கள், பொதுமக்கள் நட்டு வைத்தனர். நாமக்கல் மாவட்ட மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள், முள்ளுக்குறிச்சி ஊராட்சி செயலாளர் ஈஸ்வரன், திறன் இந்தியா பயிற்றுனர்கள், பயிற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.