மஞ்சள் சீசன் தொடங்கியது; பூஜை செய்து ஏலம் ஆரம்பம்
நாமகிரிப்பேட்டை: மஞ்சள் சீசன் தொடங்கியதை அடுத்து, நேற்று ஆர்.சி.எம்.எஸ்.,சில் புது மஞ்சளுக்கு பூஜை செய்து ஏலத்தை தொடங்கினர்.மஞ்சள் விற்பனையில், இந்திய அளவில் முக்கிய மஞ்சள் மார்க்கெட்டாக, நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை உள்ளது. இங்கு கூட்டுறவு அமைப்பான, ஆர்.சி.எம்.எஸ்., மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் ஏலம் நடக்கிறது. மஞ்சள் சீசன், ஜனவரியில் அறுவடை தொடங்கி பிப்ரவரி அல்லது மார்ச்சில் விற்பனைக்கு வரத்தொடங்கும். தொடர்ந்து, எட்டு மாதம் வரை மஞ்சள் வரத்து இருக்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதிய மஞ்சள் வரத்து இருக்காது. இதனால், இருப்பு வைத்திருக்கும் மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். மஞ்சள் சீசன் முடிந்ததால், கடந்த சில வாரங்களாக மஞ்சள் ஏலம் நடக்கவில்லை. நேற்று, புதிய மஞ்சள் வரத்து தொடங்கியது. இதையடுத்து, புதிய மஞ்சள் மற்றும் எடை இயந்திரங்களுக்கு பூஜை செய்து ஏலத்தை தொடங்கினர். ஆர்.சி.எம்.எஸ்., மேலாண் இயக்குனர் பாலசுப்ரமணியன், ஏலத்திற்கான விண்ணப்பத்தை வியாபாரிகளிடம் வழங்கினார். வியாபாரி நடராஜ் பெற்றுக்கொண்டார்.இதில், விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 9,502 ரூபாய், அதிகபட்சம், 15,599 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 8,099 ரூபாய், அதிகபட்சம், 12,559 ரூபாய்; பனங்காலி, 19,502 ரூபாயிலிருந்து, 23,599 ரூபாய் வரை விற்பனையானது. விரலி, 140, உருண்டை, 30, பனங்காலி, 9 என, 179 மூட்டை மஞ்சள், 14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.