முழு கொள்ளளவை எட்டிய துாசூர் ஏரி
எருமப்பட்டி, டிச. 15-கொல்லிமலையில் பெய்த கன மழையால், பழையபாளையம் ஏரி, துாசூர் ஏரி நிரம்பியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எருமப்பட்டி யூனியன், துாசூரில், 250 ஹெக்டேர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரி உள்ளது. கொல்லிமலையில் கன மழை பெய்யும் போது, தண்ணீர் பழையபாளையம் ஏரி நிரம்பி, துாசூர் ஏரிக்கு வரும் வகையில் நீர்வழிப்பதை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொல்லிமலையில் பெய்த கன மழையால் ஏரி நிரம்பியது. கடந்தாண்டு போதிய மழை இல்லாததால், ஏரி தண்ணீரின்றி வறண்டது. அதன்பின் இந்த ஏரியில், நாமக்கல் மாநகராட்சியின் கழிவுநீர் மட்டும் கலந்து வந்ததால் ஏரி மாசடைந்து காணப்பட்டது.இந்தாண்டு, கடந்த சில நாட்களாக கொல்லிமலையில் பெய்த கன மழையால், பழையபாளையம் ஏரி நிரம்பியது. அதை தொடர்ந்து, தண்ணீர் பழையபாளையம் ஏரியின் வடிகால் பகுதியில் இருந்து, கடந்த, 4 நாளாக தூசூர் ஏரிக்கு வந்ததால், துாசூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி, நேற்று காலை ஏரியின் வடிகால் பகுதியில் இருந்து தண்ணீர் வழிந்து சென்றது.இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.