ப.பாளையம் அருகே தலையில் கல்லை போட்டு வடமாநில வாலிபர்கள் 2 பேர் கொடூர கொலை
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் அருகே, தலையில் கல்லை போட்டு வடமாநில வாலிபர்கள், 2 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் முன்னா, 28, துபலேஷ், 27; நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் அருகே, வெப்படையில் உள்ள தனியார் நுாற்பாலையில் வேலை செய்து வந்தனர். இவர்கள், நுாற்பாலை அருகே, வாடகைக்கு அறை எடுத்து வசித்து வந்தனர். இவர்களுடன், வடமாநிலத்தை சேர்ந்த, மேலும், 4 பேர் தங்கியிருந்தனர். நேற்று காலை, வெப்படை அடுத்த பாதரையில், சாலையோர முட்புதரில் முன்னா, துபலேஷ் ஆகியோர் தலையில் கல்லை போட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். எஸ்.பி., ராஜேஸ்கண்ணன் விசாரணை நடத்தினார். இருவரின் சடலங்களை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.போலீஸ் மோப்ப நாய், 'ஸ்டெபி' சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. அதில், அருகே உள்ள டாஸ்மாக் கடை வரை மோப்பம் பிடித்து சென்றது. ஆனால், யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள், சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். கொலையாளிகளை பிடிக்க, ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.கொலை செய்யப்பட்ட இருவரில், முன்னாவிடம் மட்டுமே மொபைல் போன் உள்ளது. அதனால், அதில் வந்த அழைப்புகள், உடன் வேலை செய்யும் பணியாளர்கள், அறையில் தங்கியிருந்த வாலிபர்களிடம், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்காண காரணம் தெரியவில்லை.