கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா காரவள்ளியில் துாய்மை பணி துவக்கம்
நாமக்கல், வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலை அடிவாரம் காரவள்ளியில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி துாய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் நடந்தது.கொல்லிமலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி 17, 18 ஆகிய இரு நாட்கள், தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், வல்வில் ஓரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டு கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா ஆக., 2, 3ம் தேதிகளில் நடக்கிறது. அதையொட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன. பள்ளிக்கல்வித்துறை, சுற்றுலா துறை, கலைப்பண்பாட்டு துறைகளின் சார்பில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் நாட்டுப்புற இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.இந்நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து விட்டு, துணி பைகளை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கலெக்டர் துர்காமூர்த்தி வல்வில் ஓரி விழா நடைபெறும் இடம், கொல்லிமலை செல்லும் பாதை ஆகியவற்றை துாய்மைப்படுத்தும் பணியை நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட நிர்வாகம் மற்றும் ரெட்கிராஸ் சார்பில் நடந்த முகாமில் அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரி, கோகுல்நாதா மிஷன் கல்லுாரி, சி.எம்.எஸ்., பொறியியல் கல்லுாரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், 100-க்கும் மேற்பட்டோர் துாய்மை பணிகளில் ஈடுபட்டனர்.