உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முருகன் கோவில்களில் திருக்கல்யாண வைபவம்

முருகன் கோவில்களில் திருக்கல்யாண வைபவம்

நாமக்கல், நாமக்கல்-துறையூர் சாலை, கூலிப்பட்டியில் பிரசித்திபெற்ற கந்தகிரி பழனியாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூசத்தில் தேர் திருவிழா, ஆடி கிருத்திகை, கந்தசஷ்டி விழா கோலாகலமாக நடக்கும். அதன்படி, 19வது கந்தசஷ்டி விழா, கடந்த, 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. 23ல் ராஜ அலங்காரம், 24ல் வெள்ளி கவச அலங்காரம், 25ல் திருநீறு அலங்காரம், 26ல் முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 27 மாலை, 4:00 மணிக்கு சூரசம்ஹாரம் நடந்தது.தொடர்ந்து, நேற்று காலை, 10:45 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. அதில் உற்சவர் பழனியாண்டவர், வள்ளி, தெய்வானைக்கு அர்ச்சகர்கள் திருமணம் நடத்தி வைத்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.* காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், நேற்று காலை, 7:00 மணிக்கு நான்குமாட வீதி வழியாக மயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடந்தது. மாலை, 5:00 மணிக்கு, சுவாமிக்கு திருக்கல்யான வைபவம் கோலாகலமாக நடந்தது.* சேந்தமங்கலம், அக்ரஹாரம் பகுதியில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில், சீர்வரிசை தட்டுகளுடன் மேளதாளம் முழங்க, சுவாமிக்கு, வள்ளி, தெய்வானையுடன் திருமணம் நடந்தது. இதேபோல், நாமக்கல் பிரதான சாலையில் அமைந்துள்ள தத்தகிரி முருகன் கோவிலிலும் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடந்தது.* ப.வேலுார் அருகே, பொத்தனுார், வெங்கமேடு வல்லப விநாயகர் கோவிலில், கந்த சஷ்டி விழாவின் நிறைவுநாள் நிகழ்ச்சியான நேற்று, திருக்கல்யாணம் நடந்தது. மணமேடைக்கு எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 வகை பொருட்களால் அபிஷேகம் நடந்தது.* குமாரபாளையம், தேவாங்கர் மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் கோவிலில், திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள், 'அரோகரா' கோஷமிட்டு சுவாமியை வணங்கினர். * ராசிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் அருகில் உள்ள பாலமுருகன் கோவிலில், நேற்று நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல், கைலாசநாதர் கோவிலில் உள்ள ஆறுமுக சுப்ரமணியருக்கு திருக்கல்யாண உற்வசம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை