அம்ரூத் திட்டத்தில் ஏன் குடிநீர் வரவில்லை துணை தலைவர் ஆவேசம்; கமிஷனர் திணறல்
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் நகராட்சி சாதாரண கூட்டம், நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் நடந்த விவாதம்:பாலமுருகன், துணை தலைவர்: கடந்த, 2023 செப்.,ல், 'அம்ரூத்' குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. இன்னும் பணிகள் முழுமையாக முடிக்கவில்லை. நகராட்சி கமிஷனர், அதிகாரிகள் ஏன் இந்த திட்டத்தை முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசுக்கு கெட்ட பெயர் தான் ஏற்படுகிறது. தில்லை நகரில், 20 நாட்களாக தண்ணீர் வரவில்லை.நகராட்சி கமிஷனர்: 'அம்ரூத்' திட்டத்தில், 19 வார்டுகளுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. புதிதாக போடப்பட்ட குழாய் சேதமடைந்ததால் சீரமைப்பு பணி நடந்திருக்கும். இதனால், தண்ணீர் பிரச்னை ஏற்படும் என, தெரிவித்தார். இதனால், ஆவேசமடைந்த துணைத்தலைவர் பாலமுருகன், பல்வேறு புகார்களை அடுக்கடுக்காக வைத்தார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் நகராட்சி கமிஷனர் திணறினார். இதன் காரணமாக, சிறிது நேரம் மன்ற கூட்டம் அமைதியாக காணப்பட்டது.சிவம், ம.தி.மு.க.,: 'அம்ரூத்' திட்டத்தில் குடிநீர் வரவில்லை என்றால், பழைய குடிநீர் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். தண்ணீர் பிரச்னையால் மக்களுக்கு பதில் சொல்ல முடிய வில்லை. மன உளைச்சல் ஏற்படுகிறது.செல்வராஜ், நகராட்சி தலைவர்: 'அம்ரூத்' திட்டத்தை விரைவாக முடிக்க அமைச்சரிடம் தெரிவிக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் சேதமடைந்த தார்ச்சாலையை சீரமைக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.