ஆய்வக வசதி இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி 25 ஆண்டு அவல நிலை மாறுமா?
எருமப்பட்டி, பொட்டிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில், 25 ஆண்டுகளாக அறிவியல், உயிரியல் ஆய்வகம் இல்லாமல் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி யூனியன், பொட்டிரெட்டிப்பட்டியில் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருக்கின்றனர்.இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக இருந்து, கடந்த, 1997ல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதிலிருந்து இப்பள்ளியில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஆண்டுதோறும் முழு ஆண்டு தேர்வு எழுதி வருகின்றனர். மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, 27 ஆண்டுகள் ஆகியும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வகமும், பிளஸ் 2 மாணவர்களுக்கு உயிரியல் ஆய்வகமும் இல்லாததால், முழுஆண்டு செய்முறை தேர்வில் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முழு ஆண்டு தேர்வில், கலந்துகொள்ளும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம், இப்பள்ளியின் ஒரு வகுப்பறையை ஆய்வகமாக மாற்றி கொடுத்து தான் இதுவரை மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்த தற்காலிக ஆய்வகத்தில், மாணவர்களின் வசதிக்காக, உயிரியல் ஆய்வக கருவிகள் வைப்பதற்கான இடம், ஸ்டேண்ட், கண்ணாடி கருவிகள் இல்லாததால், முழு ஆண்டு செய்முறை தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் அந்த செய்முறை தேர்விற்கான கருவிகளை மடியில் வைத்துக்கொண்டு பயன்படுத்தும் நிலை, 25 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.எனவே, தற்போது பள்ளி திறக்கும் நிலையில், மாணவர்களின் நலனுக்காக கல்வித்துறை அதிகாரிகள், இந்த பள்ளிக்கு உயிரியல், அறிவியல் ஆய்வகம் அமைக்க வேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.