ஆர்.டி.ஓ., என கூறி வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் செய்த பெண் கைது
நாமக்கல், ஆர்.டி.ஓ., வாக பணியாற்றுவதாக கூறி, கனரா வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் செய்த பெண்ணை, நாமக்கல் போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், பெரியமணலியை சேர்ந்தவர் நவீன்குமார், 29. இவர், கோவையில் உள்ள கனரா வங்கியில், உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், நாமக்கல் ராமாபுரம்புதுாரை சேர்ந்த தன்வர்தினி, 27, என்பவருக்கும், 2024 ஜூனில் திருமணம் நடந்துள்ளது. பொள்ளாச்சியில் ஆர்.டி.ஓ.,வாக தன்வர்தினி பணியாற்றி வருவதாக, இவரது பெற்றோர் நவீன்குமார் குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். அதை நம்பி நவீன்குமார் குடும்பத்தினர் இருந்து வந்துள்ளனர்.இந்நிலையில், நவீன் குமார் உறவினர்கள் பொள்ளாச்சி சென்று தன்வர்தினி குறித்து விசாரித்துள்ளனர். அப்போது, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அந்த பெயரில் யாரும் பணியாற்றவில்லை என தெரிவித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த உறவினர்கள், நவீன்குமார் குடும்பத்தினரிடம் இது குறித்து தெரிவித்துள்ளனர். அதையடுத்து, நவீன்குமார் குடும்பத்தினர், தன்வர்தினியிடம் கேட்டபோது, தான் சிறப்பு ஆர்.டி.ஓ.,வாக பணியாற்றுவதாக தெரிவித்துள்ளார். அவரது பதிலில் சந்தேகமடைந்த நவீன்குமார் குடும்பத்தினர், சென்னை சென்று விசாரித்தபோது, தன்வர்தினி ஆர்.டி.ஓ.,வாக இல்லை என்பது அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.மாவட்ட குற்றப்பிரிவு போலீ சில், நவீன்குமார் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, ஆர்.டி.ஓ., எனக்கூறி, நவீன்குமாரை ஏமாற்றி திருமணம் செய்த தன்வர்தியை கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.