கெட்டுப்போன பேக்கரி கேக்கை உரிமையாளருக்கு ஊட்டிய பெண்
ராசிபுரம்:நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பாச்சல் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் நைனாமலை ஐயங்கார் பேக்கரி உள்ளது. இக்கடையில் சில தினங்களுக்கு முன், பெண் ஒருவர் தன் குழந்தையின் பிறந்தநாளை கொண்டாட, ஒரு கிலோ கிரீம் கேக் வாங்கியுள்ளார்.கேக் வெட்டிய போது, அதில் துர்நாற்றம் வந்துள்ளது. அது மட்டுமின்றி பூஞ்சையும் வளர்ந்து, கெட்டு போய் இருந்தது. இதையடுத்து, குழந்தையின் தாய், பேக்கரிக்கு வந்து உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'நீங்கள் தானே கடையின் உரிமையாளர். உங்கள் கடை கேக்கை நீங்களே சாப்பிடுங்கள்' என, அவரது வாயில் கேக்கை ஊட்டிவிட்டார். கடை உரிமையாளர் கேக்கை சாப்பிடாமல் துப்பினார். இதில், இருவருக்கும் நடந்த வாக்குவாதம் குறித்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவியது.இது குறித்து, நாமக்கல் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறுகையில், 'இதுகுறித்து எங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை' என்றனர்.சம்பந்தப்பட்ட கடையில் விசாரித்தபோது, 'சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் இது; சம்பந்தப்பட்ட பெண்ணை சமாதானம் செய்து அனுப்பினோம். வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது' என்றனர்.