பஞ்.,களில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தென்னைக்கு மண் அணைக்க பதிவு செய்யலாம்
நாமகிரிப்பேட்டை, கிராம ஊராட்சிகளில், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் தென்னைக்கு மண் அணைக்க ஊராட்சி செயலாளரிடம் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில், 100 நாள் வேலை உறுதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் விவசாய கூலித்தொழிலாளர்கள் நீர் ஓடைகள், ஏரிகள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தொடர்ந்து, விவசாய நிலங்களில் சில பணிகளுக்கு நுாறுநாள் வேலை திட்டத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தென்னை மரங்களுக்கு மண் அணைக்கும் பணியில் விவசாய தொழிலாளர்களை பயன்படுத்தலாம் என, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு, மாநில துணைத்தலைவர் லோகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில், கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாய தொழிலாளர்களுக்கு, 100 நாள் வேலையளிக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், நீர் ஓடை சுத்தம் செய்வது, நீர் பிடிப்பு பகுதிகளை மண் அள்ளுவது பஞ்சாயத்தில் நடைபெறும் கட்டட வேலைகளை பயன்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன.தற்போது, விவசாயிகள் தங்கள் தென்னை மரங்களுக்கு மண் அணைக்கும் பணியை இத்திட்டம் மூலம் செயல்படுத்திக்கொள்ளலாம். விவசாய தென்னை மரங்களுக்கு மண் அணைக்க வேண்டும் என்றால் உடனடியாக சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலரிடம் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம்.இவ்வாறு லேகேந்திரன் தெரிவித்தார்.