சுற்றுலா பயணிகள் வருகை குறைவு வெறிச்சோடிய படகு இல்ல ஏரி
குன்னுார்:குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால், படகு இல்ல ஏரி வெறிச்சோடி காணப்படுகிறது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் கிருஷ்ண ஜெயந்தி, வார இறுதி நாட்கள் காரணமாக தொடர் விடுமுறை இருந்ததால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. அதற்கு பின், மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.குறிப்பாக, குன்னுார் சிம்ஸ் பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், படகு இல்ல ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் இல்லாமல் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளன.வரும், அக்., நவ., மாதங்களில் நடக்கும், 2-வது சீசனுக்காக சிம்ஸ் பூங்காவில் நடவு செய்யப்பட்ட மலர் நாற்றுகளுக்கு பூங்கா பணியாளர்கள் தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். புல் தரைகள் சமன்படுத்தும் பணி, சாம்பிராணி செடிகளால், வனவிலங்குகளின் வடிவமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் இரண்டாம் வாரத்தில் வரும் சீசனுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளது.