மேலும் செய்திகள்
சாலையில் கால்நடைகள் உலா உரிமையாளருக்கு அபராதம்
23-Aug-2024
பந்தலுார்;பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்ப்போர் பலர், தங்கள் கால்நடைகளை பகல் நேரத்தில் பஜார் பகுதியில் விடுகின்றனர்.இதனால், பாதசாரிகள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், வாகன ஓட்டுனர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், புதிய பஸ் ஸ்டாண்ட், கடைகள் முன்பாக இரவு நேரத்தில், ஓய்வெடுக்கும் கால்நடைகளால் அப்பகுதி தொழுவமாக மாறி வருகிறது.மக்களின் புகாரை அடுத்து, கால்நடைகளை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த சில நாட்களாக, நகராட்சி மூலம் கால்நடைகளை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று நெல்லியாளம் நகராட்சி அலுவலகத்தில் கால்நடை வளர்போருக்கான விழிப்புணர்வு கூட்டம், நகராட்சி கமிஷனர் முனியசாமி தலைமையில் நடந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வர்கீஸ் முன்னிலை வகித்தார்.அதில், 'கால்நடைகளை மக்கள் நடமாடும் இடங்கள் மற்றும் பொதுவெளிகளில் மேய விட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி மூலம் பிடிக்கப்படும் கால்நடைகளை பராமரிப்பதற்கு அதன் உரிமையாளரிடம் இருந்து தலா, 200 ரூபாய் வசூலிப்பதுடன், அபராதம் விதிக்கப்படும்.தொடர்ந்தும், இதனை கட்டுப்படுத்தாவிட்டால் சம்பந்தப்பட்ட கால்நடைகள் ஏலத்தில் விடப்படும். இதனால், கால்நடை வளர்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை உரிய பாதுகாப்புடன் வளர்க்க வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.கால்நடை வளர்ப்போர் கூறுகையில், 'வனவிலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக, கால்நடைகள் வீட்டு கொட்டகைகளில் இருக்க பயந்து வெளியேறி வருகின்றன. மேய்ச்சல் நிலங்கள் தனியார் தோட்டங்களின் கட்டுப்பாட்டில் உள்ளதால், மேய்ச்சலுக்கு இடம் இல்லாமல் சிரமப்படுகிறோம். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என்றனர்.அதிகாரிகள் கூறுகையில்,'இந்த பிரச்னை குறித்து மாவட்ட கலெக்டரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
23-Aug-2024