| ADDED : ஜூன் 08, 2024 12:34 AM
பந்தலுார்;பந்தலுார் அருகே கூவமூலா பகுதியில் உற்பத்தியாகும் பொன்னானி ஆறு, தமிழக எல்லைக்குள் பல்வேறு வழியாக பாய்ந்து, கேரளா மாநிலம் வயநாடு வழியாக கர்நாடக மாநிலம் கபினி அணைக்கு செல்கிறது. இதனால், கபினியின் முக்கிய கிளை நதியாக பொன்னானி ஆறு உள்ளது. மழை காலங்களில் இந்த ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் அனைத்தும் கபினி அணைக்கு செல்கிறது.இதனால், கோடை காலங்களில் தமிழக எல்லைக்குள் உட்பட்ட பகுதி மக்கள், அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையிலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தும் வகையிலும் சார்பில், பல்வேறு இடங்களில் சிறிய தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் கோடை காலங்களில் தடுப்பணைகளில் சேகரிக்கப்பட்டு வருகிறது.தற்போது, பொன்னானி பகுதியில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் அமைப்பதற்கான, முதல் கட்ட ஆய்வுப்பணி மேற்கொள்ளப்பட்டது. அதில், வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் கமலி மற்றும் சிலர் பங்கேற்றனர். அங்கு வந்த, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் பொதுச்செயலாளர் சிவசுப்ரமணியம், இப்பகுதியில், தடுப்பணையில் கட்ட ஏதுவான இடங்கள் குறித்து தெரிவித்தார். அதிகாரிகள் கூறுகையில்,' இந்த ஆய்வு குறித்து தெரிவித்து, அரசு நிதி ஒதுக்கீடு செய்வது பொருத்து தடுப்பணைகள் கட்டும் பணி துவக்கப்படும்,' என்றனர்.