ரெப்கோ வங்கி சார்பில் ரூ. 1.20 கோடியில் வளர்ச்சி பணி
பந்தலுார்; 'ரெப்கோ வங்கி சார்பில் ரூ. 1.20 கோடி மதிப்பில் அரசு பள்ளிகளில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கூடலுார் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பந்தலுார் மற்றும் கூடலுார் பகுதிகளில், 'ரெப்கோ' வீட்டு கடன் திட்டம் சார்பில், 12 அரசு பள்ளிகளில், 1.20 கோடி ரூபாய் செலவில் கழிப்பிடங்கள், மேடை, கிணறு அமைக்கப்பட்டது. இவற்றை மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் நிகழ்ச்சி பள்ளிகளில் நடந்தது. பொன்னுார், தேவாலா, வாழவயல், கரியசோலை, கொளப்பள்ளி, உப்பட்டி, குந்தலாடி உள்ளிட்ட, 12 பள்ளிகளில் நடந்த நிகழ்ச்சியில், 'ரெப்கோ' வங்கி தலைவர் சந்தானம் மாணவர்கள் பயன்பாட்டிற்கு கழிப்பிடங்களை திறந்து வைத்து பேசியதாவது: ரெப்கோ நிறுவனத்தின் லாபத்தில் ஒரு பகுதி தாயகம் திரும்பிய மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்களில், நலத்திட்ட பணிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.குறிப்பாக தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அதிகம் படிக்கும் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. எதிர்காலங்களில் மேலும் பல திட்டங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த காலங்களில் இதுபோன்ற அடிப்படை வசதிகள் செய்து தராமல் இருந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோருக்கு பெரும் பயனாக இருப்பதை மறுக்க இயலாது. இங்குள்ள மாணவர்கள் கல்வி கற்பதில் கவனம் செலுத்தி, உயர்கல்வி படிக்கவும், வேலை வாய்ப்புகள் பெறவும் முன்வர வேண்டும். அதற்கு தேவையான உதவிகள் வங்கி மூலம் செய்து தரப்படும். எனவே, வங்கியின் செயல்பாட்டிற்கு, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் கூறப்படும் பொய் புகார்களை கவனிக்காமல், தங்களின் கிராம வளர்ச்சிக்கும், குழந்தைகளின் வளர்ச்சிக்கும் என்ன செய்ய வேண்டுமோ அதனை, வங்கியில் கேட்டு பெற்று பயன்பெற முன் வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், 'நம்ம ஊர்; நம் பள்ளி' திட்ட பிரதிநிதி அர்ஜுணன், ரெப்கோ வங்கி வீட்டுக்கடன் வசதிநிறுவன தலைவர் தங்கராஜ், அறங்காவலர் மதிவாகனம், பேரவை பிரதிநிதிகள் கலை செல்வன், ராஜா மற்றும் தாயகம் திரும்பிய மலையை மக்கள் கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் கிராம மக்கள் பங்கேற்றனர். பேரவை பிரதிநிதி வக்கீல் கணேசன் நன்றி கூறினார்.