நகரில் உலா வரும் தெரு நாய்களால் அச்சம்
கூடலுார்;கூடலுார் நகரில் உலா வரும் தெரு நாய்களால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கூடலுார் நகரில் காலை, மாலை நேரங்களில் தெரு நாய்கள் அதிக அளவில் உலா வரத் துவங்கியுள்ளன. இவைகள் அடிக்கடி தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளன. இதனால், மக்கள் அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, நகராட்சி நிர்வாகத்திடம் பல முறை புகார் கொடுத்தும் பயன் ஏதும் இல்லை.மக்கள் கூறுகையில், 'கூடலுார் நகரில் உலா வரும் தெரு நாய்கள் பள்ளி மாணவர்கள், பொதுமக்களை கடிக்கும் அபாயம் உள்ளதால், அச்சத்துடன் நடந்து செல்ல வேண்டி உள்ளது. நாய்களால் ஆபத்து ஏற்படும் முன், அவைகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.