வழித்தடங்கள் மாறி இயக்கப்படும் அரசு பஸ்கள்; அவதிப்படும் உள்ளூர் பயணிகள்
பந்தலுார்:பந்தலுார் பகுதியில் இயக்கப்படும் அரசு பஸ்களில் வழித்தட பெயர்கள் மாற்றி இயக்குவதால் பயணிகள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு, அரசு போக்குவரத்து கழகத்தின் கூடலுார் கிளையிலிருந்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதில், பஸ் இயக்கப்படும் ஊர்களின் பெயர்களை முன் மற்றும் பின்பக்க கண்ணாடிகளில் 'ஸ்டிக்கர்' மூலம் பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ஒட்டியும், பக்கவாட்டு கண்ணாடிகளில் ஊர்களின் பெயர்களை எழுதியும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், சமீப காலமாக ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ள இடங்களை தவிர்த்து வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பயணிகள் பஸ் எந்த ஊருக்கு செல்கிறது என்று தெரியாமல், பஸ்சில் ஏறி சிறிது துாரம் பயணித்த பின்னர் நடுவழியில் இறக்கி விடப்படும் அவலம் தொடர்கிறது. அதில், சமவெளி பகுதிகளான, ஈரோடு, திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும், புதிய பஸ்களும் உள்ளூர் பகுதிகளுக்கு இயக்குவதால், பழுதடைந்து இரவு நேரங்களில் சமவெளி பகுதிகளுக்கு இயக்கும்போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.எனவே, பயணிகள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில், ஒவ்வொரு பகுதிக்கும் இயக்கப்படும் பஸ்களை அந்தந்த வழித்தடங்களில் இயக்குவதற்கு, போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.