காசநோய் இல்லா ஊராட்சியாக நெல்லியாம்பதி தேர்வு
பாலக்காடு;பாலக்காடு மாவட்டத்தில், காசநோயில்லா ஊராட்சியாக நெல்லியாம்பதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், நெம்மார அருகே நெல்லியாம்பதி உள்ளது. இங்கு, 2023ல் ஊராட்சி ஒத்துழைப்புடன் நெல்லியாம்பதி ஆரம்ப சுகாதார மைய பணியாளர்கள் தலைமையில், காசநோய் ஒழிப்புக்காக நடவடிக்கை எடுக்கப்பட்டது.பொதுமக்களுக்கு சளி பரிசோதனை முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், காசநோய் பாதித்தவர்களை கண்டுபிடித்து, நோய் குணமடையும் வரை சிகிச்சை அளிப்பது, ஊட்டச்சத்து உணவுகள் வினியோகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.இதன் பலனாக, இப்பகுதியில் காசநோயை ஒழிக்க முடிந்தது. இதை மதிப்பாய்வு செய்த அரசு, மாவட்டத்தின் முதல் காச நோய் இல்லா ஊராட்சியாக நெல்லியாம்பதியை தேர்வு செய்துள்ளது.இதற்கான விருதை, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனை மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடந்த தேசிய காசநோய் ஒழிப்புத் திட்ட நிகழ்ச்சியில், மின்சார துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி, நெல்லியாம்பதி ஊராட்சி தலைவர் பிரின்ஸ் ஜோசப் மற்றும் மருத்துவ அதிகாரி லட்சுமி ஆகியோருக்கு வழங்கினார்.