காட்டேரி பூங்காவில் 2 லட்சம் நாற்று நடவு பணி துவக்கம்
குன்னுார்; குன்னுார் காட்டேரி பூங்காவில் கோடை சீசனுக்கான மலர் நாற்று நடவு பணி நேற்று துவங்கியது. குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில், உள்ள காட்டேரி பூங்கா மலைகள் சூழ்ந்த மற்றும் ரன்னிமேடு ரயில் நிலையம் அருகே உள்ளது. மிகவும் ரம்மியமாக உள்ள இந்த பூங்காவில், ஆண்டுதோறும் கோடை சீசனில் மலர்கள் நடவு செய்து பொலிவு படுத்தி சுற்றுலா பயணிகளை கவரும் பணிகள் நடந்து வருகின்றன.கடந்த ஆண்டு, ஒரு லட்சத்து, 32 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். நடப்பாண்டு, கோடை சீசனுக்காக, 'பிரஞ்ச் மற்றும் ஆப்பிரிக்க வகை மெரிகோல்டு, பிளாக்ஸ், சூரியகாந்தி, ஆன்டிரினம், பெட்டுனியா, பால்சம், பெகோனியா, சால்வியா, குட்டை ரக சால்வியா, ஆஸ்டர், ஜினியா, வெர்பினா மற்றும் டேலியா,' என, 30 வகை விதைகளில் நாற்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெர்மனி, பிரான்ஸ் நெதர்லாந்து நாடுகள் மற்றும் கொல்கத்தா, காஷ்மீர் போன்ற இடங்களிலிருந்து பெறப்பட்டு மலர் நாற்றுகள் தயாராக உள்ளன.இந்நிலையில், நடப்பாண்டு, 2 லட்சம் நாற்றுக்கள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனையொட்டி, நேற்று நாற்று நடவு பணி சிறப்பு பூஜைகளுடன் துவக்கப்பட்டது. தோட்டக்கலை துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி பணியை துவக்கி வைத்தார். இந்த மலர்கள் அனைத்தும் ஏப்., மூன்றாவது வாரத்தில் இருந்து பூத்து குலுங்க வாய்ப்புள்ளது.நிகழ்ச்சியில், தோட்டக்கலை துணை இயக்குனர் அப்ரோஸ் பேகம், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் விஜயலட்சுமி (குன்னுார்), அனிதா (ஆய்வு கூடம்), தோட்டக்கலை அலுவலர் ஜெய பிரகாஷ், உதவி தோட்டக்கலை அலுவலர் சபாரத்தினம் உட்பட பலர் பங்கேற்றனர்.