உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / இரண்டாம் கட்டமாக பழைய கடைகள் இடிக்கும் பணி

இரண்டாம் கட்டமாக பழைய கடைகள் இடிக்கும் பணி

ஊட்டி ; ஊட்டி மார்க்கெட்டில் இரண்டாம் கட்ட பணிக்காக பழைய கடைகள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. ஊட்டி நகராட்சி மார்க்கெட் கடந்த, 80 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டது, 1,500 கடைகள் இருந்தது. கடைகள் அனைத்தும் பழமை வாய்ந்த கடைகள் என்பதால், புதிய கடைகள் கட்டுவதற்கு நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக, கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. முதற்கட்ட பணி, 18 கோடி ரூபாய் நிதியில் நடந்து வருகிறது. 190 கடைகள் இடிக்கப்பட்டது. அங்கு, புதிய கடைகளுக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. கடை வியாபாரிகளுக்காக ஏ.டி.சி., பகுதியில் தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டது. ஆனால், முதற்கட்ட பணி தாமதமானதால் இரண்டாவது கட்ட பணியை குறிப்பிட்ட நாளில் துவக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இரண்டாவது கட்ட பணி

இந்நிலையில், இரண்டாம் கட்டமாக பழைய கடைகளை இடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடைகளை காலி செய்து தருமாறு நகராட்சி நிர்வாகம் சார்பில், ஏற்கனவே, 36 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. கடைகளை காலி செய்யும் வியாபாரிகளுக்காக ஏ.டி.சி. , பகுதியில் கூடுதலாக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு கூறுகையில்,'' நகராட்சி மார்க்கெட்டில் புதிய கடைகளுக்கான கட்டுமான பணிகளை விரைவுப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட பணியை ஒட்டி, கடைகளை காலி செய்து தருமாறு, 36 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இடிக்கும் பணி நடந்து வருகிறது. கடைகளை காலி செய்த வியாபாரிகளுக்கு ஏ.டி.சி. , கூடுதலாக அமைக்கப்பட்ட தற்காலிக கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்றார்

அவசியம்

மார்க்கெட்டில் புதியகடைகள் கட்ட கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் , 36 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மூன்று கட்டங்களாக பழைய கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகளுக்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதி பற்றாக்குறையால் கூடுதலாக, 20 கோடி ரூபாய் மாநில அரசிடம் கேட்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ